பக்கம் எண் :

460

(பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக்கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியதொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந் தேயத்து அவர்க்கு யாது நிகழும்'? என்றும் 'வருந்துணையும் யாம்ஆற்றியிருக்குமாறு என்? என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காம வேதனையும், புறத்து 'யாழிசை,மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்''என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணரநின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.)

அதிகாரம் 117. படர் மெலிந்து இரங்கல்

[அது , படரான் மெலிந்து இரங்கல் என விரியும் .அஃதாவது பிரிவாற்றாளாய தலைமகள் , தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின், அந்நினைவான் மெலிந்து இரங்குதல் . அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும் .]

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.
1161
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. ('அம்மறைத்தலால் பயன் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.