சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.) துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.) அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. 189 புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.) ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190 ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது
|