பக்கம் எண் :

79

நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

அதிகாரம் 20. பயன்இல சொல்லாமை

(அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

191
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.

192
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)