அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.) தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.212 தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.) புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. 213 புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.) ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். 214 உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
|