இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.218 இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.) நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. 219 நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.) ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. 220 ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.) அதிகாரம் 23. ஈகை
(அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.)வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221
|