கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.) இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.224 இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.) ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி. 226 அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)
|