சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.) ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.233 ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 234 நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. 235
|