பக்கம் எண் :

94

நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

236
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?.

237
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)