இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.) இல்லறவியல் முற்றும். துறவறவியல் (இனி முறையானே துறவறம் கூறிய தொடங்கினார்.துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி அறிவுடையவராய்ப் பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம். அதுதான் வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள் தூய ஆதற்பொருட்டு அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூய ஆயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும். அவற்றுள் விரதங்களாவன : 'இன்ன அறம் செய்வல்' எனவும், 'இன்ன பாவம் ஒழிவல்' எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன.அவைதாம் வரம்பிலவாகலின் பெருகுமென்று அஞ்சி,அவை தம்முள்ளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் அருள் உடைமை கூறுகின்றார்.)
அதிகாரம் 25. அருள் உடைமை(அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)
|