அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.243 இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.) மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்உயிர் அஞ்சும் வினை. 244 மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.) அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. 245 அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)
|