பக்கம் எண் :

10

4. அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவித்தல்.

இதனானே அறத்துப்பால் முற்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவரால் கொண்டு உய்க்கப்படுதலின் பிற்கூறப்பட்டது.

31. சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.

இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
கூறிற்று.

1

32. ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க.

இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

2

33. அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.

இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

3