408 உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர். உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது. 8 409 நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது. 9 410 விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது. 10 42. கேள்வி கேள்வியாவது கேள்வியாமாறும் அதனானாகிய பயனும் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார்மாட்டுக் கேட்டலும் அறிவுக்குக் காரணமாம் என்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது. 411 கற்றில னாயினுங் கேட்க வஃதொருவன் ஒற்கத்துக் கூற்றாந் துணை. கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம். இது கேள்வி வேண்டுமென்றது. 11
|