428 அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர். பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று. 8 429 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண். ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று. 9 430 எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை யதிர வருவதோர் நோய். துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது. 10 44. குற்றம்கடிதல் குற்றம் கடிதலாவது காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு குற்றமும் கடிந்து ஒழுகுதல். இஃது அறிவுடையாராயினும் குற்றம் கடிதல் வேண்டும் என்று அதன்பின் கூறப்பட்டது. 431 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான். இது குற்றங் கடிய வேண்டு மென்றது. 1
|