34 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று. 4 35 அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. 5 36 வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது. 6 37 செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார். 7
|