3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர். 3 4. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின். 4 5. அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்த லரிது. அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது. |