3. காமத்துப்பால் இதனுள் தகையணங்குறுத்தல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தல் ஈறாக அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமுமாகிய அதிகாரம் மூன்றும், நலம்புனைந் துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விதும்பலீறாகப் பிரிந்து கூடலும் அதற்கு நிமித்தமுமாகிய அதிகாரம் பதினெட்டும், நெஞ்சொடுபுலத்தல் முதலாக ஊடலுவகை யீறாக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமுமாகிய அதிகாரம் நான்கும், ஆக இருபத்தைந்து அதிகாரம் கூறப்பட்டது.
1. களவியல்
109. தகையணங்குறுத்தல் தகையணங்குறுத்தலாவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கலவியினானாகிய இன்பப் பகுதி கூறுதல். அஃதெங்ஙனம் கூறினாரெனின், ஒருவனுக்கு இன்பம் கலத்தற்கிடம் கன்னியரும் கணிகையரும் பிறர் தாரமும் என் மூவகையல்லது இல்லை; அவற்றுள், பிறர்மனைக் கூட்டம் பாவம் தரும் என்று அறத்துப்பாலுட் கூறிக் கணிகையர் கூட்டம் பொருள் கேடுதரும் என்று பொருட்பாலிற் கூறினாராதலின், அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்டம் என்றார் என்பது. 1081 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது. 1
|