பக்கம் எண் :

271

1097 அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்.

அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க
நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்

அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க
குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

7

1098 உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்.

கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.

இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

8

1099 செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.

இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது

9

1100 கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.

கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.

இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

10