111. புணர்ச்சி மகிழ்தல் புணர்ச்சி மகிழ்தலாவது தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் புணர்ச்சியினை மகிழ்ந்து கூறுதல். 1101 பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து. நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம். இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று. 1 1102 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள. கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது. 2 1103 தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு. தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம். 3
|