1104 தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு. தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது. 4 1105 வேட்ட பொழுதி னவையவை போலுமே தோள்தாழ் கதுப்பினா டோள். காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல். 5 1106 அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று. 6 1107 நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள். தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று. 7
|