பக்கம் எண் :

274

1108 உறுதோறு றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.

சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

8

1109 வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம்.

இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.

9

1110 ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன்.

காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.

10

112. நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தலாவது தலைமகளது நலத்தினை அலங்காரவகையால் கூறுதல். புனைந்துரை எனினும், பாராட்டு எனினும், கொண்டாட்டு எனினும், மகிழ்ச்சி எனினும்
ஒக்கும்.