பக்கம் எண் :

275

1111 மதியும் மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.

மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.

1

1112 அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?

இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

2

1113 மாதர் முகம்போலொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி.

வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.

3

1114 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றல் மதி.

மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக.

இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

4