114. நாணுத் துறவுரைத்தல் நாணுத் துறவுரைத்தலாவது தலைமகன் தனது நாணின்மையைத் தோழிக்குக் கூறுதலும், தலைமகளது நாணம் நீங்கினமையைத் தோழி தலைமகற்குக் கூறுதலுமாம். காதல் மிக் கார்க்கு நாணமில்லை என்பதனால், அதன் பின் இது கூறப்பட்டது. 1131 காம முழந்து வருந்தினார்க் கேமம் மடலல்ல தில்லை வலி. காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது. 1 1132 நோனா வுடம்பு முயிரு மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது. 2 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன். 3 1134 அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகும் மருண்டு. என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல். 4
|