1135 மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண். பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது. 5 1136 தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர். மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று. 6 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது. 7 1138 நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம மறையிறந்து மன்று படும். நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது. 8
|