1155 ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு. காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 5 1156 செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு; பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. 6 1157 அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். பொறத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர். அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல். 7 1158 பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னும் நசை. பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது. 8
|