1177 உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்கண்ட கண். அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 7 1178 பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா உய்வினோ யென்கண் நிறுத்து. உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு. 8 1179 வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை யாரஞ ருற்றன கண். அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவா ரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது. 9 1180 படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண். கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. 10
|