1204 தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல். தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது. 4 1205 விளியுமென் இன்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைந்து. நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது. 5 1206 மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியேன் உள்ளினு முள்ளஞ் சுடும். அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 6 1207 எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது. 7 |