1208 மற்றியா னென்னுளேன் மன்னோ அவரொடியா னுற்றநா ளுள்ள வுளேன். யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது; யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன். இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது. 8 1209 எனைத்து நினைப்பினுங் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு. யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை. 9 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி. என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம். 10 122. கனவு நிலை உரைத்தல் கனவு நிலை உரைத்தலாவது கனவினது நிலையைச்சொல்லுதல், காதலரை யொழிவின்றி நினைப்பார்க்கு உறக்கமில்லையாகும்; அவர் உறங்கினாராயின், அவரது சேதியை மறவாது நினைப்பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. தலைமகன் நினைத்தல் தலைமகள் நினைத்தல் என்னும் இரண்டனுள்ளும் இவட்காயின், உறக்கமில்லை என்று கொள்க. |