1211 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண். 11 1212 நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி லுண்டென் னுயிர். நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின் உயிருண்டாதற்குக் காரணமுண்டோ? இஃது உறங்கினால் காணலாமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 12 1213 கனவினா லுண்டாகுங் காமம் நனவினால் நல்காரை நாடித் தரற்கு. நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 13 1214 நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது. நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 14
|