1222 மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத கால மறிந்த திலேன். மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது. 2 1223 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலுங் கொல்லும் படை. நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ? இப்பொழுது வருத்துதலின் படை என்றாள். 3 1224 காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ? இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது. 4 1225 பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயும்என் மாயா வுயிர். பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது. 5 |