பக்கம் எண் :

307

1233 தணந்தமை சால வறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன.

கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.

3

1234 பணைநீங்கப் பைந்தொடி சோரும் துணைநீங்கத்
தொல்கவின் வாடிய தோள்.

துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே
பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது.

பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

4

1235 கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.

இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது

5

1236 தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து.

வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.

இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

6