1251 காம மெனவொன்று கண்ணின்றென் னெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில். காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது. 1 1252 மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும். காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது. 2 1253 நிறையுடையே னென்பேன்மன் யானேயென் காமம் மறையிறந்து மன்று படும். யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. 3 1254 காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 4 |