1273 மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை அணியிற் றிகழ்வதொன்று றுண்டு. கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு. 3 1274 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது. 4 1275 பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 1276 தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினும் முன்ன முணர்ந்த வளை. குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன. 6 1277 பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு. வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது. 7
|