பக்கம் எண் :

330

1319 பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பரத்தமையை யுடையாய்! நின்மார்பைப் பெண்மை யுடையா ரெல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர். அதனால் யான் அதனைத் தீண்டேன்.

இது தலைமகள் புலவிகண்டு என்மாட்டுக் குற்றமியாதோ வென்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.

9

1320 ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.

தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார்.

இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

10

133.ஊடலுவகை

ஊடலுவகையாவது தலைமகன் மற்றுள்ள நாள்கள் போலன்றி அன்றையிற் புண்ர்ச்சி பெரியதோர் இன்பமுடைத்தென்று அதற்குக் காரணமாய ஊடலை வியந்து கூறுதலும் அவ்வண்ணமே தலைமகள் கூறுதலுமாம். இது மேலதனோடு இயையும்.

1321 ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா.

விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்.

இது மனவூக்கத்தின்கண் வந்தது.

1