பக்கம் எண் :

332

1326 ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய உப்பு.

நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?

ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.

6

1327 தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ
ளகறலி னாங்கொன் றுடைத்து.

தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து.

இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

7

1328 புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை.

என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும்.

அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.

8

1329 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.

அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று.

இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

9

1330 புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து.

நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?

நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.

10