10. கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை. அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார் 10 2.வான்சிறப்பு வான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல் இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமுமினிது நடப்பது மழையுண்டாயினென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும். 11. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார். 1 12. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது. 2
|