13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார். 3 14. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று. 4 15. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது. 5 16. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர். 6
|