3. நீத்தார் பெருமை நீத்தார் பெருமையாவது, துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது, கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்கவேண்டும் என்பதனாலும், அவர் அதை அடையத்தக்கவர் என்ற கருத்தினாலும், அவையிற்றின் பின் கூறப்பட்டது. 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. 1 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று. 2 23. உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து. அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
|