நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று. 7 28. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது. 8 29. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று. 9 30. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது. 10
|