பொருட்பால் 1. அரசியல் இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கணழியாமை ஈறாகக் கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மையும் அமைச் சர்க்கு உரியவாதலின் அமைச்சியல் என்றும், நாடு முதலாகப் படைச்செருக்கு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதியாதலின் பொருளியல் என்றும், நட்பு முதலாகக் கூடா நட்பு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின் நட்பியல் என்றும், பேதைமை முதலாக மருந்து ஈறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டும் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியல் என்றும், குடி முதலாகக் கயமை ஈறாகக் கூறிய அதிகாரம் பதின்மூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியல் என்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதும் ஆறு பகுதியாயிற்று. 39. இறைமாட்சி இதனுள், இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல். இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகாரம் கூறப்பட்டது. 381 படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு. படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று. 1
|