பக்கம் எண் :

94

382 அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

2

383 தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

3

384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

4

385 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்.

காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.

இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

5

386 இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்.

பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

6