40. கல்வி கல்வியாவது கல்வி ஆமாறும் அதனான் ஆகிய பயனும் கூறுதல். இது முதலாகப் பொருள் வரவு இயற்றும் திறங்கூறுகின்றார் ஆதலின், அஃது இயற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும்; அதனால் இது முன் கூறப்பட்டது. 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க வதற்குத் தக. கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது. 1 392 எண்ணென்ப வேனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர். 2 393 கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று. 3 394 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது. 4
|