பக்கம் எண் :

97

395 ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.

ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை
யுடைத்து.

கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

5

396 கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல.

இது கல்வி அழியாத செல்வமென்றது.

6

397 யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?

இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது

7

398 உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில்.

இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

8

399 தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.

இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.

9