403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது. 3 404 கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும் கொள்ளார் ரறிவுடை யார். கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது. 4 405 கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. 5 406 மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. 6 407 நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது. 7
|