பக்கம் எண் :

11

11. செய்ந்நன்றி அறிதல்
 

1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. 101
 

2. காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும். 102
 

3. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். 103
 

4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். 104
 

5. உதவி வரைத்தன்று உதவி: உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். 105
 

6. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. 106
 

7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். 107
 

8. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும். 108
 

9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.109
 

10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. 110