1. அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். | | அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்.
| 121 | | |
2. காக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. | | அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
| 122 | | |
3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். | | அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
| 123 | | |
4. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. | | தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.
| 124 | | |
5. எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்: அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து. | | பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
| 125 | | |
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. | | ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
| 126 | | |
7. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | | காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். | 127 | | |
8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகா தாகி விடும். | | தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
| 128 | | |
9. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. | | தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
| 129 | | |
10. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. | | சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
| 130 | | |
|
|