1. பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். | | பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
| 141 | | |
2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். | | அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
| 142 | | |
3. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். | | ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.
| 143 | | |
4. எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். | | தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
| 144 | | |
5. எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. | | இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
| 145 | | |
6. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். | | பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
| 146 | | |
7. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன். | | அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
| 147 | | |
8. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. | | பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
| 148 | | |
9. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார். | | கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
| 149 | | |
10. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. | | ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
| 150 | | |
|
|