1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | | தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
| 151 | | |
2. பொறுத்தல் இறப்பினை என்றும்: அதனை மறத்தல் அதனினும் நன்று. | | வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
| 152 | | |
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. | | வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
| 153 | | |
4. நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். | | நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
| 154 | | |
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. | | (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
| 155 | | |
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். | | தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
| 156 | | |
7. திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. | | தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
| 157 | | |
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். | | செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
| 158 | | |
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். | | வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
| 159 | | |
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். | | உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
| 160 | | |
|
|