1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. | | கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
| 391 | | |
2. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. | | எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
| 392 | | |
3. கண்உடையர் என்பவர் கற்றோர்: முகத்துஇரண்டு புண்உடையர் கல்லா தவர். | | கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
| 393 | | |
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். | | மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
| 394 | | |
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். | | செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
| 395 | | |
6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. | | மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
| 396 | | |
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. | | கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
| 397 | | |
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. | | ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.
| 398 | | |
9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். | | தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.
| 399 | | |
10. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை. | | ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.
| 400 | | |
|
|