1. அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். | | அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
| 401 | | |
2. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. | | (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
| 402 | | |
3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். | | கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.
| 403 | | |
4. கல்லாதான் ஓட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுஉடை யார். | | கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.
| 404 | | |
5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். | | கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.
| 405 | | |
6. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர். | | கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.
| 406 | | |
7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. | | நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
| 407 | | |
8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. | | கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.
| 408 | | |
9. மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. | | கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
| 409 | | |
10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். | | அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
| 410 | | |
|
|