1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. | | செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
| 411 | | |
2. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். | | செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். | 412 | | |
3. செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. | | செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
| 413 | | |
4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. | | நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.
| 414 | | |
5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். | | ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.
| 415 | | |
6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். | | எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
| 416 | | |
7. பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். | | நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
| 417 | | |
8. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. | | கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
| 418 | | |
9. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. | | நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
| 419 | | |
10. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? | | செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
| 420 | | |
|
|